"குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது" - அமைச்சர் அன்பில் மகேஷ்
குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் வழங்கி, இந்த நிதி ஆண்டிற்கான 28 புதிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி, 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்து, ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என அறிவித்தார். தமிழ்மொழியின் வரலாறு, பண்பாட்டு, மரபு மற்றும் தமிழ் சமூகத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் நூல்களை மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழரின் பாரம்பரிய கலைகளை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் எடுத்து செல்லும் வகையில், நாட்டுப்புற கலைஞர்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.