எம்.எல்.ஏ.அலுவலகத்தில் சட்டவிரோத கட்டுமானம்- உடனடியாக இடிக்க நீதிமன்றம் உத்தரவு

சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டிடத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-18 10:29 GMT
பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்படும் சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது


இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 


அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதனை பொதுப்பணித்துறை நிறைவேற்றததால், சட்டமன்ற உறுப்பினரே தனது சொந்த செலவில் கூட்டரங்கை  கட்டி வருவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.


அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்ட விரோத கட்டுமானத்தில் தீவிரமான அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கூறி கண்டனம் தெரிவித்தனர். 


எவ்வளவு உன்னதமான நோக்கமாக இருந்தாலும், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் கடிந்து கொண்டனர். 


மேலும், அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டுவரும் கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வேறு காரணங்களுக்காக அந்த இடத்தை பயன்படுத்தவும் அனுமதிக்க கூடாது என  சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்