"ஏரியில் பழங்கால கிணறு கண்டுபிடிப்பு" - தூர் வாரும் போது தெரிந்ததாக தகவல்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஏரியை தூர் வாரும் போது பழங்கால கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அருகே உள்ள நல்லம்பல் கிராமத்தில் 56 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. சுற்றுலா பகுதியான நல்லம்பல் ஏரி , தூர்வாரப்படாததால் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. தற்போது காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் ஏரியை தூர் வாரும் பணிகள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகின்றன.
தூர்வாரும் போது ஏரியின் ஒரு பகுதியில் பழமையான கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நிறுத்தப்பட்டு ஏரியின் மற்ற இடங்களில் நடைபெற்று வருகின்றன. பழமையான கிணறு குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏரியை தொல்லியல் துறையின் கண்காணிப்பில் தூர்வாரி ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.