பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலி - காய்கறி வியாபாரிகள் கவலை
டீசல் விலை உயர்வின் எதிரொலியாக லாரி வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளதால், காய்கறி வரத்து அதிகரித்தும், விலையைக் குறைக்க முடியவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை, 99 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் விலை 93 ரூபாய் 72 காசுகளுக்கும் விற்பனையாகிறது.தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கான தினசரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளது.லாரிகளுக்கான நாள் வாடகை கிலோ மீட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்ய கூடுதல் செலவுகள் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக, கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு காய்கறிகள் வரத்து அதிகரித்தும், காய்கறிகளின் விலையைக் குறைக்க முடியாத சூழல் நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பச்சைக் காய்கறிகள், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
இதனால், காய்கறிகளின் விலை 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை குறைந்திருக்க வேண்டிய சூழலில், லாரிகளுக்கான வாடகை உயர்த்தியதன் காரணமாக, காய்கறி விலையைக் குறைக்க முடியவில்லை என்று வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் வரும் காலங்களில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வரத்து குறையும் பட்சத்தில், விலை மும்மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.