பசி மயக்கத்தில் விழுந்து உயிரிழந்த தங்கை - அனாதையான மனநலம் பாதித்த அண்ணன்
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் பசியை போக்க உணவின்றி உயிரை விட்டுள்ளார் ஒரு பெண்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே இலங்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெலபிரதா. 20 ஆண்டுகளுக்கு முன்பு நோய் தாக்கி தந்தை ராகவன் இறந்துவிட, தாய் பிரபாவதி, மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன் மணிகண்டனை கவனிக்கும் பொறுப்பு ஜெலபிரதாவுக்கு வந்துள்ளது. தோட்ட வேலை, வீட்டு வேலைக்கு சென்று சொற்ப வருமானத்தில் குடும்பத்தை காப்பாற்றி வந்தார், ஜெலபிரதா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தாய் பிரபாவதியும் நோயுற்று இறந்தார். பெற்றோர் இருவரையும் இழந்து, அண்ணனுடன் குடிசை வீட்டில் வறுமையோடு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த குடிசை வீடும், 3 நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுக்கு இரையாகி முழுவதுமாக சேதமடைந்தது. கொரோனா காலத்தில் எங்கே செல்வது, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியாமல், அண்ணனுடன் அருகில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் குடியேறினார் ஜெலபிரதா.
குழாய் தண்ணீரை மூன்று வேளையும் குடித்து இருவரும் பசியை சமாளித்து வந்தனர். இந்நிலையில், பசி மயக்கத்தால் மயங்கி விழுந்து ஜெலபிரதா உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரனுக்காக திருமணம் செய்து கொள்ளாமல், வாழ்க்கையை தியாகம் செய்து பசியால் ஜெலபிரதா உயிரிழந்தது, அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.