மே 26,27 தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மே 30ம் தேதி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது.
* சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.