பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் - சர்வரில் ஏற்பட்ட பிரச்சினையால் பணி தற்காலிக நிறுத்தம்
தமிழகம் முழுவதும் பயோ-மெட்ரிக் முறையில் ரேஷன் பொருள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் பயோ-மெட்ரிக் முறையில் பொருள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டப்படி குடும்ப உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து எந்த கடையில் வேண்டும் என்றாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், இம்முறை அமல்படுத்தப்பட்டதில் இருந்து சர்வரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பல்வேறு குளறுபடி ஏற்பட்டது. பொருள் பெறுவது மிகவும் தாமதமாகியது. பல இடங்களில் பொருளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடைகளில் விற்பனையாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடை பணியாளர்கள், பிரச்சினை தீரும் வரையில் பயோ-மெட்ரிக் முறையை நிறுத்த கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இன்று காலை முதல் பயோ-மெட்ரிக் முறையில் பொருள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய முறையிலேயே ரேஷன் கார்டுகளை ஸ்கேன் செய்து பொருள் வழங்கப்பட்டு வருகிறது.