"அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ்" - ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இந்த அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சி அலுவலகத்திற்கு வந்த ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு, அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனனின் முழு ஒப்புதலோடு இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறினார்.
அ.தி.மு.கவின் வழிகாட்டு குழு அமைப்பு : உறுப்பினர்கள் பெயரை அறிவித்தார் முதல்வர்
இதைதொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.கவின் வழிகாட்டு குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்தார். அந்த குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் உள்பட 11 பேர் இடம்பெற்றிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
வழிகாட்டு குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியலை தொடர்ந்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.கவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தி, தனது வாழ்த்துகளை துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி : பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிப்பால் உற்சாகம் அடைந்த தொண்டர்கள், அலுவலகத்திற்கு வெளியே பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல், திருச்சியிலும், அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.