"இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம், தமிழோ பேரடையாளம்" - கவிஞர் வைரமுத்து உணர்ச்சிகரமான அறிக்கை
இந்திமொழி மட்டும் தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா அதிர்ச்சியூட்டுவதாகவும், ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நோக்கி மட்டும் கேட்கப்பட்ட கேள்வியல்ல இது என்றும் வடக்கின் விரல் தெற்கை நோக்கி கேட்கும் நீண்ட கால கேள்வி இது எனவும் அவர் கூறியுள்ளார். 1,961-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,652 தாய்மொழிகளை கொண்ட இந்த நாட்டை ஒரு சிமிழுக்குள் அடைக்க சிந்திப்பது சரியா? என வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் சம உரிமை, 22 இந்திய மொழிகளுக்கும் வழங்கப்படுவது தான் இந்தியாவை இணைத்திருக்கும் கயிற்றை இற்று போகாமல் கட்டிக் காக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் இந்திமொழி மட்டும்தான் இந்தியாவை ஆளப்பிறந்த மொழி என்ற ஆதிக்கம் சரியாகுமா?, இந்தியாவுக்கு வடக்கு மட்டுமே திசையாகுமா? என வைரமுத்து வினவியுள்ளார். தொன்மைமிக்க தமிழ் மொழியை நேற்று வந்த மொழிகள் உரசி பார்ப்பதற்கும், ஊடுருவ பார்ப்பதற்கும் உடன்படோம் என கூறியுள்ள வைரமுத்து, இந்தி இந்தியாவின் ஓர் அடையாளம், தமிழோ பேரடையாளம் என தெரிவித்துள்ளார்.