தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? - அறநிலைய துறையிடம் அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்
தமிழகத்தில், எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமுடக்கம் அமலால் கோயில்கள் மூடப்பட்ட நிலையில், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், வேதபாராயணிகள் ஆகியோருக்கு மாதம் தலா 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இதை விசாரித்த நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில், பணியில் இருந்த பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்கியதாகவும், மற்றவர்கள் குடும்ப அட்டை மூலம் பயனடைந்ததாகவும் அறநிலையத் துறை விளக்கம் அளித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாநிலம் முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டுவிட்டனவா என கேள்வி எழுப்பினர். கிராம கோயில்கள் மட்டும் திறந்துள்ளதாக அறநிலையத்துறை பதிலளித்த நிலையில், தமிழகம் முழுவதும் திறந்துள்ள மற்றும் மூடியுள்ள கோயில்களின் எண்ணிக்கை, அதில் உள்ள பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் எத்தனை பேர் என விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.