வாகனச் சான்றிதழ்களின் காலம் நீட்டிப்பு - செப்டம்பர் 30 வரை செல்லும் என அறிவிப்பு
வாகன சான்றிதழ்களுக்கான காலத்தினை செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்றிதழ், பர்மிட்கள், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் காலாவதியாகும் காலம் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கால நீட்டிப்பு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் வாகன ஆவணங்கள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டால், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆவணங்கள் செப்டம்பர் வரை செல்லுபடியாகும் என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.