10 ஆம் வகுப்பு தேர்வு வழக்கு - ஜூன் 11 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பான வழக்கு வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-08 17:17 GMT
* பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த‌து. 

* அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், எதிர்வரும் நாட்களில் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளதால், தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என வாதிட்டார்.  

* இதையடுத்து, ஜூன் 30 ஆம் தேதி வரை மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதனை மீறி மாநில அரசு தேர்வு நடத்த முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

* இதை தொடர்ந்து, மற்ற 11 மாநிலங்கள் தேர்வுகளை நடத்திவிட்டன என கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசு தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். 

* தேர்வு மையங்கள் கிருமி நாசினிகள் தெளித்தும், மாணவர்கள் மாஸ்க் அணிந்தும் மத்திய அரசு வகுத்துள்ள நடைமுறைகளை பின்பற்றி தேர்வை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

* மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள் என நீதிபதிகள் காட்டமாக கேள்விகளை முன்வைத்தனர். மாணவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர, மாணவர்கள் உயிருக்கு யார் உத்தரவு அளிப்பார்கள் என நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். 

* அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், தற்போது மாணவர்களுக்கு ஆபத்து நேரிட வாய்ப்பில்லை, இனி வரும் நாட்களில் தேர்வு நடத்தப்பட்டால் பேராபத்தாக அமையும் என்றார். 

* 9 லட்சம் மாணவர்கள் , 2 லட்சம் ஆசிரியர்களின் உயிர் சம்பந்தபட்ட விவகாரத்தில் எப்படி ரிஸ்க் எடுக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தேர்வை ஜூலை மாதம் நடத்தலாமே என கேட்டனர். 

* ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து  விசாரிக்க முடிவு செய்த நீதிபதிகள், ஜூன் 11 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். அந்நாளில் அரசு தரப்பில் கூடுதலாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்