ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி தீவிரம்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.;
சென்னையில் அந்தந்த மண்டலங்களிலேயே கொரோனா சிகிச்சை அளிக்க, சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் 3000 படுக்கைகளும் பாதிப்பு குறைவாக உள்ள மண்டலங்களில் 1500 படுக்கைகளும் என ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது
இதன் அடிப்படையில் கொரோனாவால் 3000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள ராயபுரம் மண்டலத்தில் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி அரசு கலைக் கல்லூரியில் அனைத்து வகுப்பறைகளிலும் படுக்கைகள் போடப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள பிற மண்டலங்களிலும் கல்லூரி, பள்ளி வளாகம் என பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரிப்பதால், பாதிக்கப்படுபவர்கள் மற்ற மண்டலங்களுக்கு செல்லாமல் அவர்கள் இருக்கும் மண்டலத்திலேயே சிகிச்சை பெறுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.