3 மாதத்திற்கு வாடகை வசூலிக்க தடை கோரி மனு - அரசாணை பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டில் வாடகைதாரர்களிடம் இருந்து மூன்று மாத காலத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் இது தொடர்பான பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊரடங்கை கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்க கூடாது என மார்ச் 29ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதை பின்பற்றி தமிழக அரசும் அரசாணையை வெளியிட்டது, ஆனால் அப்போது 15 நாட்கள் வரை தான் ஊரடங்கு அமலில் இருந்தது என்றும், அதற்கு பின் 60 நாட்களுக்கு மேல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான வீட்டின் உரிமையாளர்கள் ஒரு மாத வாடகையை கூட வசூல் செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டிய மனுதாரர், இது தொடர்பாக அரசுக்கு மனு அனுப்பியும், எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஊரடங்கால் பொது மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ள நிலையில், 3 மாத காலத்திற்கு வாடகை கட்டணத்தை வசூலிக்க கூடாது என அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.