"ஊரடங்கில் விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல்" - அரசு நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
ஊரடங்கால் வேளாண் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கால் விளைபொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் ராஜேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண்துறை சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோட்டக்கலை மற்றும் உணவு பாதுகாப்பு துறை மூலம் விளை பொருட்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவரை 6 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்களை ஆயிரத்து100 மொபைல் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.