லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது
லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார், நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தனி துணை ஆட்சியராக (முத்திரை கட்டணம்)பணியாற்றி வருபவர் தினகரன். இவரிடம், திருவண்ணாமலை ரஞ்சித்குமார், பூர்வீக சொத்து ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பாக அணுகினார். இதற்கு, தினகரன் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இது குறித்து ரஞ்சித் குமார் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் அறிவுறுத்தலின் பேரில் நேற்று இரவு கலெக்டர் அலுவலகம் அருகே காரில் வந்த தினகரனிடம் ரஞ்சித்குமார் ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அதை வாங்கிய தினகரன் வேகமாக சென்ற நிலையில், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று பிடித்தனர். தினகரனிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது கைப்பையில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 94 ஆயிரம் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தினகரன் மற்றும் டிரைவர் ரமேஷ் குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.