கட்டாய விருப்ப ஓய்வில் சென்ற 50 சதவீத ஊழியர்கள் - சேவைகளை அளிக்க முடியாமல் திணறும் பி.எஸ்.என்.எல்

பொதுத்துறை தகவல் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளிக்க முடியாமல் தத்தளித்து வரும் நிலையில், அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு...

Update: 2020-02-27 05:46 GMT
இந்திய தொலைத்தொடர்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த  பி.எஸ்.என்.எல்., நிறுவனம், இன்று வாடிக்கையாளர் சேவை மையத்தில்கூட பணியாளர் இல்லாமல் திணறி வருகிறது.

நிறுவனத்தின்,  வாடிக்கையாளர் எண்ணிக்கை சுமார் 12 கோடி. பணியாளர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 53 ஆயிரம். 

மிகப்பெரிய சந்தை, பணியாளர் பலம் இருந்தும், கடந்த 10 ஆண்டுகளாகவே நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு நஷ்டம் சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.

தனியார் நிறுவனங்களுக்கு 3 ஜி, 4ஜி என அடுத்தடுத்து அலைக்கற்றை உரிமம் வழங்கிய மத்திய அரசு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மட்டும் 4 ஜி உரிமம் அளிப்பதில் தாமதம் செய்துள்ளது.

இதனால், பி.எஸ்.என்.எல் க்கு பின்னால் தொடங்கப்பட்ட   தனியார் நிறுவனங்கள் லாபத்தை கண்ட நிலையில்,  பி.எஸ்.என்.எல் நிறுவனமோ, அவர்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு சென்றது.

ஊதியம் வழங்க முடியாத நிலை, மத்திய அரசு பங்குகளை  விலக்கிக் கொள்ளும் முடிவுகளுக்கு எதிராக ஊழியர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம், கடந்த மாதம் 31 ஆம் தேதி, சுமார் 78 ஆயிரத்து 500 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர்.

50 சதவீதத்துக்கு அதிகமாக ஊழியர்கள் வெளியேறியுள்ள நிலையில், போதுமான தற்காலிக பணியாளர்களும் நியமனம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், வாடிக்கையாளர் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  சென்னையில் உள்ள பல சேவை மையங்களில் ஊழியர்கள் இல்லை என்றும் சொல்கின்றனர்.

சம்பள நிலுவை காரணமாக,  கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையிலும், நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தால், லாபகரமான நிலையை அடையலாம் என்கின்றனர் தற்போது நீடிக்கும் ஊழியர்கள். இதர தொலைத் தொடர்பு நிறுவனங்களும் நெருக்கடியில் உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் மீண்டு வருவது மத்திய அரசின் கைகளில்தான் உள்ளது என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்