இந்த ஆண்டு சென்னையை தண்ணீர் பஞ்சம் தாக்குமா?
இந்த ஆண்டு கோடைக் காலத்தில் சென்னையை தண்ணீர் பஞ்சம் அல்லது சமாளிக்கும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளதா
உயிர்களுக்கு இன்றியமையாத தேவை தண்ணீர். ஆனால், அதிக தண்ணீரை வீணாக்குவதிலும், சேமிக்காமல் விடுவதிலும் நாம் முன்னிலை வகிப்பது வேதனையான உண்மை. அதுவும், சென்னையில் உள்ள ஏழை, எளிய மக்கள் தண்ணீரின்றி படும் துன்பங்கள் சொல்லி மாளாதவை.
கடந்த ஆண்டு கோடையில், ஐடி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தண்ணீர் வழங்க முடியாமல் தவித்தன. இதற்கு, 2018 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டதே காரணம். அதற்கு மாறாக 2019-ஆம் ஆண்டில் 637 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட குறைவு என்றாலும், கடும் வறட்சிக்கு இது பரவாயில்லை என்பதே உண்மை.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக உள்ள பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளை சேர்த்து 6.2 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.
ஏரிகளின் தண்ணீர், ஜூலை மாதம் வரை போதுமானது என்று கூறும் நீரியல் வல்லுனர்கள், அரக்கோணம் வரை நீளும் சென்னை விரிவாக்கத்தில் 4000 ஏரிகள் உள்ளது என்றும், ஏரிக்குள் ஏரி அமைத்து, மழை நீர் சாக்கடையில் கலப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அரிவுறுத்துகின்றனர். சென்னைக்கு கடந்த ஆண்டு போல் தண்ணீர் பஞ்சம் நிலவாமல் இருக்க நீரை சேமித்து வைக்க வேண்டும் என்பதே அவர்களின் முன்னெச்சரிக்கை.