மேட்டுப்பாளையத்தில் யானை பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
மேட்டுப்பாளையம் நலவாழ்வு முகாமில் யானைகள் புடைசூழ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தேக்கம்பட்டி பவானியாற்றின் கரையோர பகுதியில் தமிழக அரசு சார்பில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு யானைகள் நலவாழ்வு முகாம் காலை முதலே களைகட்ட துவங்கியது. அதிகாலை முதலே யானைகள் அனைத்தும் குளிக்க வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. பின்னர் முகாமில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு அழைத்து வரப்பட்ட யானைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு யானைகள் புடைசூழ பொங்கல் பானை வைக்கப்பட்டது. நான்கு புறமும் கரும்புகள் கட்டப்பட்டு நடுவில் விறகு அடுப்பின் மீது வைக்கப்பட்ட பொங்கல் பானையில் அரிசி, வெல்லம், பால் போன்றவை போடப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது. பானையில் பொங்கல் பொங்கி வழிந்ததும் சுற்றியிருந்த யானைகள் அனைத்தும் ஆனந்த பிளிறல் எழுப்ப பாகன்களும் முகாம் ஊழியர்கள் பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பி உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.யானைகளுக்கும் முகாமில் உள்ளவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.