பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும் திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை போல், வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழா பிரலமானது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி,
சேலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் எருதுவிடும் திருவிழாவை எருதுக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கின்றனர்.
வாணியம்பாடி, ஆம்பூர், அரூர், வெள்ளக்குட்டை, வளையாம்பட்டு, விண்ணமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் எந்த அனுமதியும் இல்லாமல் , காலகாலமாக நடத்தப்பட்டு வந்த இந்த எருது விடும் திருவிழாவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
காளைகள் ஓடும் பகுதியில் யாரும் நிற்கக்கூடாது, காளைகளை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் உள்ளிட்ட பல விதிமுறைகளுடன் தற்போது எருது விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
எருது விடும் திருவிழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிர பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வாணியம்பாடி அருகே மாராப்பட்டு கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் 13 காளைகளை வளர்த்து வருகிறார். அதில் ஒரு காளையான ஒத்த கொம்பன் காளை பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று கிராம மக்களை
பெரிதும் கவர்ந்துள்ளது.
காளைகளுக்கு சத்தான உணவும், பல பயிற்சிகளையும்
அளிப்பதாக அவற்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒற்றை கொம்பன் காளைக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளதாகவும், அவர்கள், காளையின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுவதாகவும் பன்னீர்செல்வம் பெருமையுடன் கூறுகிறார்.