உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட சட்டமுறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளதாக திமுக தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை அடிப்படையில், மறுவரையறை மேற்கொள்ளப்பட்டதால், தற்போது மறுவரையறை தேவையில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, வைக்கப்பட்ட வாதங்களை அடுத்து, குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தொகுதி மறுவரையறை செய்யப்படுவது, குழப்பில்லாமல் சரியான இடஒதுக்கீடு முறையை பின்பற்றத்தானே? என்றும், புதிய மாவட்டங்களில் மறுவரையறை செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா? என்றும் கேள்வி எழுப்பினார். 3 மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்? என்றும் கேள்வி கேட்டனர். தொடர்ந்து, குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று குறிப்பிட்டனர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு, தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளி போட முடியாது என்றும், தேவைப்பட்டால் 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் என்று தெரிவித்தது. தொடர்ந்து வைக்கப்பட்ட வாதங்களை கேட்ட நீதிபதிகள், புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை உத்தரவை திரும்ப பெற முடியுமா? என்பது குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்குள் பதில் தர தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர். மேலும், 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர்.