சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்ப கோரி சத்துணவு ஊழியர்கள் மறியல் - கைது
சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு பொது வளாகத்தில் திரண்ட 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள், அங்கிருந்து பேரணியாக புறப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே அங்கு வந்த காவல்துறை, மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி முன்பாக உள்ள திருவனந்தபுரம் பிரதான சாலையில் சத்துணவு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வு ஏற்ப மானியத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.
தேனி நேரு சிலை அருகே போராட்டம் மேற்கொண்ட ஊழியர்கள், காலமுறை சம்பளம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட, சத்துணவு ஊழியர்கள், சத்துணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கக்கூடாது, சத்துணவு மையங்களை இணைத்து, மூடுவதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.