பொள்ளாச்சி அருகே பிடிபட்ட 'அரிசி ராஜா' யானை : லாரியில் கொண்டு சென்றபோது மயக்கம் அடைந்ததால் பரபரப்பு
பொள்ளாச்சி அருகே பருத்தியூரில் பிடிபட்ட காட்டுயானை அரிசிராஜா, டாப்சிலிப் வரகழியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கடந்த 9-ந்தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே வந்த போது, தென்னந்தோப்பில் பதுங்கி இருந்த காட்டு யானை அரிசிராஜா, அவரை கீழே தள்ளி மிதித்து கொன்றது. இந்நிலையில் ராதாகிருஷ்ணணை அடித்துகொன்ற யானை 4 நாட்களுக்கு பிறகு பருத்தியூரில் பிடிபட்டது. அந்த யானைக்கு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு ஊசி என மொத்தம் 4 மயக்கஊசி கால்நடை மருத்துவர்கள் மூலம் செலுத்தப்பட்டது. பின்னர் டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்வதற்காக லாரியில் யானை ஏற்றப்பட்டது. ஆனால் வழியில் சென்ற போது யானை மயக்கம் அடைந்தது. இதனையடுத்து வேட்டைதடுப்பு காவலர்கள் யானை மீது தண்ணீர் ஊற்றி எழுப்பினர். பின்னர் கும்கி யானை கலீம் உதவியுடன் வரகளியாறு முகாமில் மரக்கூண்டில் அரிசி ராஜா யானை அடைக்கப்பட்டது. இதனிடையே, கரும்பு, வெள்ளம், சத்து மாவு உள்ளிட்ட உணவுகள் அரிசிராஜாவுக்கு வழங்கப்படும் என ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார். காட்டுயானை அரிசிராஜாவின் உடல்நிலை சீரான பிறகு, ஒரிரு நாளில் கோழிக்கமுதி முகாமுக்கு மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.