ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி : 2 மணி நேரத்தில் மோசடி மன்னர்கள் கைது
ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர்களை 2 மணிநேரத்தில் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறது, ரயில்வே பாதுகாப்பு படை.
சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பட்டாசுகளை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்பதை அறிவுறுத்தி ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட நபர்கள் சென்னை பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவநேசனை சந்தித்து ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சத்திய மூர்த்தி என்ற நபர் கொடுத்த ஆவணங்களை காண்பித்துள்ளனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
இதில் ஆச்சர்யபடுத்தும் தகவல் என்னவென்றால், சாதுர்யமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், புகார் அளித்த இரண்டே மணி நேரத்தில் மோசடி மன்னர்களை கைது செய்து கெத்து காட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவருடைய செல்போனிலிருந்து மோசடி மன்னன் சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்ட பாதுகாப்பு படையினர், பாதிக்கப்பட்ட நபரையே பேச வைத்துள்ளனர். சத்தியமூர்த்தி 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்க, ரயில்வே பாதுகாப்பு படை அறிவுறுத்தலின்பேரில், குறிப்பிட்ட இடத்தில் வந்து பெற்றுகொள்ளுமாறு கூறியுள்ளார், அந்த பாதிக்கப்பட்ட நபர்.
இதனை நம்பி வந்த சத்தியமூர்த்தி உள்ளிட்ட 2 பேரை, அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். ஆனால் ரயில்வே பாதுகாப்பு படையிடம் சிக்கியும், தான் ரயில்வே அதிகாரி தான் என போலியான அடையாள அட்டையை காட்டியுள்ளார் அந்த துணிச்சல் மோசடி மன்னன் சத்தியமூர்த்தி.
இந்த கும்பல் பலரிடம் வேலை வாங்கி தருவதாக 60 லட்சம் ரூபாய் வரை பணத்தை மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2 மணி நேரத்தில் மோசடி மன்னர்களை கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படையினரை பாராட்டியுள்ள பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.