தமிழகத்தை அதிர வைத்த சுபஸ்ரீயின் மரணம் : தலைமறைவான நிர்வாகியை தேடும் பணி தீவிரம்
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால், இல்ல திருமண விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி ஏறியதில், சுபஸ்ரீ படுகாயம் அடைந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, அவ்வழியே சென்ற வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 12ந் தேதி பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், இந்த விபத்து நிகழ்ந்தது.
சட்டவிரோத பேனர் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் தாமாக எடுத்துக்கொண்டு விசாரித்தது. அப்போது பேனர் வைக்க சொன்னவர்கள் மீது நடவடிக்கை இல்லையா? யாருக்காக பேனர் வைக்கப்பட்டது? அவர்கள் பெயர் வழக்கில் சேர்க்கப்படவில்லையா என நீதிபதிகள் கடுமையாக கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, அ.தி.மு.க நிர்வாகி ஜெயகோபாலின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. பள்ளிக்கரனையில் பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக வழக்கு ஒன்றும், பரங்கிமலையில் கவனக்குறைவாக உயிர் பலி ஏற்படுத்துதல் பிரிவில் போக்குவரத்து போலீஸ் சார்பில் ஒரு வழக்கும் ஜெயகோபால் மீது பதியப்பட்டது. இந்த வழக்கில் அவர் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், ஜெயகோபால் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. போலீசார் விசாரணையில், அது ஜெயகோபாலின் அண்ணன் என்பது தெரிய வந்தது. விபத்து ஏற்பட்ட நாளில் இருந்து இதுவரை அ.தி.மு.க பிரமுகரிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. கடந்த ஒரு வாரமாக சுபஸ்ரீ வழக்கில் தொடர்புடைய ஜெயகோபால், காவல்துறை கண்ணில் சிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
இதனிடையே, திருமணம் முடிந்த புதுமண தம்பதிகள், தேனிலவுக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களுடன் ஜெயகோபாலும் வெளிநாடு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எப்படியாயினும், விரைவில் ஜெயகோபால் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பேனர் வைக்கமாட்டோம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்ட திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பேனர் கலாசாரத்தை புறக்கணித்துள்ளனர். இதை ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கடைபிடிக்கும் பட்சத்தில், பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் முற்றிலும் ஒழியும் என்பதே நிதர்சனம்...