ஒரே சமயத்தில் 3 பெண்களுடன் காதல் - காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம்

காதலனுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடி தன் பெற்றோரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் அதே காதலனுடன் சேர்த்து சிறைக்கு அனுப்ப‌ப்பட்டுள்ளார்.

Update: 2019-09-15 16:08 GMT
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வித்யா , சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த வியாழக்கிழமையன்று மாலை தன் சகோதரன் விக்னேஷுக்கு போன் செய்த வித்யா, தன்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் கடத்திச்சென்றதாக கூறியுள்ளார். அதன் பின் வித்யாவின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வித்யாவின் தந்தை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, சாதாரணமாக போன்செய்தால், டிராக் செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், இணையதளம் வாயிலாக போன் செய்துள்ளார் ஒரு மர்மநபர்... பணம் தராவிட்டால், மகள் உயிரோடு இருக்கமாட்டாள் என அந்த மர்ம நபர் மிரட்டும் தோனியில் பேச, வித்யாவின் குடும்பத்தினருக்கு பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.  

இதுஒருபுறம் இருக்க, அந்த மர்ம நபரின் தொலைபேசி உரையாடலை வைத்து, கோயம்பேடு போலீசார், தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர்... 

வித்யாவின் செல்போன் எண்ணை பரிசோதித்த‌போது, அந்த செல்போன் எண், காரைக்காலை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண் முகவரியில் வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது  போலீசாருக்கு சிறிய சந்தேகத்தை ஏற்படுத்த, காரைக்கால் புறப்பட்டது தனிப்படை போலீஸ்...இதுவே இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  

அக்‌ஷயாவிடம் விசாரித்த‌தில், தன் காதலன் மனோஜ் தான் இந்த செல்போனை வித்யாவிற்கு வாங்கி கொடுக்க சொன்னதாக போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்... வித்யா கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதே நாளில் தான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திருக்கிறார் இந்த மனோஜ்.... இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த மனோஜ் குறித்து அலச தொடங்கிய போது, பல எதிர்பாராத திருப்பங்கள் வெளிவந்துள்ளது. 

அக்‌ஷயா மூலம் மனோஜை போலீசார் தொடர்புகொண்டபோது, தனக்கு வித்யா என்று யாரையும் தெரியாது என்று கூறியுள்ளார் மனோஜ்... கடலூரில் உள்ள காவல்நிலையத்திற்கு வருகிறேன் வேண்டுமானால் என்னை விசாரித்து கொள்ளுங்கள் என்று சற்றும் பதற்றம் இல்லாமல் மனோஜ் தன் நாடகத்தை அரங்கேற்ற, போலீசாரும் சற்றே தடுமாறி இருக்கின்றனர். 

கூறியது போலவே, கடலூர் காவல்நிலையம் வந்து சேர்கிறார் மனோஜ், அதே சமயம் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட வித்யாவும்  சென்னை வந்து சேர்கிறார். அவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலே பிடித்து போலீசார் விசாரணை செய்த‌தில், மனோஜ்தான் தன்னை புதுச்சேரியில் இருந்து சென்னை அனுப்பிவைத்த‌தாக ஒப்புக்கொண்டுள்ளார். 

மனோஜ் கூறியதால், தன் தந்தையிடம் கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க ஒப்புகொண்டுள்ளார் வித்யா... இந்த தகவல்களை அடுத்து, சாமர்த்தியமாக செயல்படுவதாக எண்ணி, கடலூர் காவல்நிலையத்திற்கு வந்த மனோஜை, சிரமமே இல்லாமல் போலீசார் கைது செய்தனர். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், காதலி வித்யாவை கடத்த, மற்றொரு காதலி மூலம் சிம்கார்டு வாங்கி கொடுத்த மனோஜ், தன் மாமா மகள் ஒருவரையும் காதலித்து வந்துள்ளார். ஆனால், மூவருக்கும் மனோஜின் இந்த காதல் லீலைகள் தெரிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்