ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை : குலசேகரமுடையார் கோவிலில் மீண்டும் நிறுவ ஏற்பாடு
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவிலில் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை மீண்டும் நிறுவ ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் நடராஜர் சிலை ஒன்று இருப்பதை அறிந்த சிலை தடுப்பு பிரிவினர், அந்நாட்டு அதிகாரிகளிடம் பேசி அந்த சிலையை தமிழகம் கொண்டு வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு பின்னர் நடராஜர் சிலை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து சிலை நிறுவும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. கோவிலை சுற்றி அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மேலும் நடராஜர் சிலை வைக்கக் கூடிய சன்னதிக்கு எதிரே அதிநவீன சிசிடிவி கேமரா மற்றும் இரும்புக் கதவு பொருத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் கோவிலை சுற்றியுள்ள அனைத்து கதவுகளும் அலாரம் தொழில்நுட்பம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது.