சுங்கச்சாவடியில் தகராறில் ஈடுபட்ட 6 பேர் கும்பல் : துப்பாக்கியால் சுட்டு ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்க சாவடியில் துப்பாக்கியால் சுட்ட 6 பேரை போலீசார் கைது செய்து, 4 துப்பாக்கிகள், 18 தோட்டாக்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

Update: 2019-08-29 18:52 GMT
திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச் சாவடியில், காரில் வந்த 6 பேர் கும்பல்,  கட்டணம் தர மறுத்து ஊழியர்களிடம் கைகலப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானை நோக்கி 3 முறை சுட்டுள்ளது. இதனால் சுங்கசாவடி ஊழியர்கள் அச்சமடைந்தனர். பின்னர், காரில் தப்பி சென்ற அக்கும்பலில் இருந்து சசிகுமார் என்பவரை துப்பாக்கியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர். 

காரில் தப்பிய மற்ற  5 பேரையும்  உசிலம்பட்டி அருகே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள் , 18 தோட்டாக்கள், 14 செல்போன்கள், 10 தங்க மோதிரம், 2 தங்க செயின் , 34 ஆயிரத்து 500 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான 6 பேர் மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.  

அவர்களில், மதுரை மேலூரை சேர்ந்த வசூல்ராஜா மற்றும் சென்னை எண்ணூரை  சேர்ந்த தனசேகரன் ஆகிய இருவர் மீது 30க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், மற்ற 4 பேர் மீதும் பல வழக்குகள் உள்ளதாகவும்  மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார். இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர். தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக எச்சரிக்கப்பட்ட நிலையில் கைத்துப்பாக்கிகளுடன் இக்கும்பல் பிடிபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்