தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இதுவரை நடத்திய விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் விசாரணை குறித்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து செப்டம்பர் 16 ஆம் தேதி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் இதுவரை 365 சாட்சிகளை விசாரித்துள்ளதாகவும், 550 ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 300 சாட்சிகளுக்கு மேல் விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணை ஆணையம் இதுவரை மேற்கொண்ட விசாரணை தொடர்பான விவரங்களை ஆணைய செயலாளர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை புதன்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.