தமிழக கால்நடை மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் மவுசு - உடுமலை ராதாகிருஷ்ணன்
தமிழக கால்நடை மருத்துவர்களுக்கு, உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு உள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரி, கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில், நடப்பாண்டு சேரும் 15 மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதி கடிதத்தை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது 4 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 2 கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்ற பலர், அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும், அவர் தெரிவித்தார். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதை பட்டியலிட்டார். விரைவில் 12 ஆயிரம் கறவை மாடுகள், 6 லட்சம் வெள்ளாடுகள் மற்றும் இரண்டரை லட்சம் பெண்களுக்கு தலா 25 நாட்டுக் கோழிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.