நெல்லை : 3 பேர் கொலை வழக்கு - கொலைக்கான துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறல்
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல்துறை பெரும் சவாலை சந்தித்துள்ளது.
நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் காவல்துறை பெரும் சவாலை சந்தித்துள்ளது.
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை நடந்து 3 நாட்களை கடந்த பின்னும் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். உமா மகேஷ்வரி வீட்டில் தனித் தனி அறைகளில் மூவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததாலும் இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு முதற்கட்ட சந்தேகம் எழுந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமான வீடு என்பதால், நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு, பணம் நகைக்காக வடமாநில கொள்ளையர்கள் கொலையை நடத்தி இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்கு இடமாக சுற்றித் திரிந்த 2 வடமாநிலத்தவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அறிமுகமில்லாத நபர்கள் யாரும் உமா மகேஷ்வரி வீட்டுக்குள் செல்ல முடியாது என்கிற தகவலால், தெரிந்தவர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன் உமா மகேஷ்வரி வீட்டில், சொத்து தகராறு காரணமாக நெருங்கிய உறவினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உறவினர்கள் 70 பேர் வரை விசாரணை வளையத்துக்குள் போலீசார் கொண்டு வந்தனர். இந்த நிலையில்தான், திடுக்கிடும் திருப்பமாக அரசியல் விவகாரத்தில் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகின.
இதையடுத்து, நெல்லையைச் சேர்ந்த திமுக மகளிர் அணி நிர்வாகி சீனியம்மாள் வீட்டுக்குச் சென்ற தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சீனியம்மாளும், உமா மகேஷ்வரியும் ஆரம்பத்தில் ஒன்றாக அரசியல் செய்து வந்தவர்கள் என்றும், நெல்லை மாநகராட்சி மேயர் ஆனதையடுத்து அரசியலில் உமா மகேஷ்வரியின் கை ஓங்கியுள்ளது. அதையடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருமாறு உமா மகேஷ்வரியிடம் கேட்டு வந்ததாகவும், இது தொடர்பாக பெரும் தொகை கை மாறியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சீனியம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை மறுத்துள்ள சீனியம்மாள், தன் மீது பழி போட முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், கொலை சம்பவத்தின் மற்றொரு கோணமாக, உமா மகேஷ்வரியின் கணவர், முருகசங்கரனுக்கு உள்ள ரியல் எஸ்டேட் பிரச்சினைகளால் கொலை நடந்திருக்குமா என்கிற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதையடுத்து சங்கரன் கோவிலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் 3 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்த போலீசார் , தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்து 3 நாட்களை கடந்த பின்னும், 100 க்கும் மேற்பட்டவர்களை விசாரித்த பின்னும் திக்கு தெரியாமல் நிற்கும் காவல்துறைக்கு, தற்போது முக்கிய தடயமாக தண்ணீர் சொம்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சொலை செய்யப்பட்ட உடல்களுக்கு அருகில் கிடந்த அந்த தண்ணீர் சொம்பில், வீட்டில் உள்ளவர்கள் கைரேகை மட்டுமின்றி வெளியாட்கள் கைரேகையும் பதிவாகியுள்ளதாக காவல்துறை கண்டறிந்துள்ளது. பழக்கமில்லாத நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்காத முன்னாள் மேயர் குடும்பத்தாரிடம், கொலை நடந்த அன்று நெருங்கிய யாரோ ஒருவர் வீட்டில் பேசிக் கொண்டு இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர் .கொலை நடந்த அன்று வீட்டுக்கு வந்து சென்ற அந்த நெருங்கிய நபர் யார் என்பதை, சொம்பில் உள்ள கைரேகை காட்டிக் கொடுக்குமா.. கொலையில் நீடிக்கும் மர்மம் விலகுமா?... போலீசாரின் விசாரணை தீவிரமடைகிறது...