ஆசிரியர் வருகைப் பதிவு கருவியில் இந்தி - ஆசிரியர்கள் அதிர்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோ-மெட்ரிக் கருவியில் தமிழுக்கு பதிலாக இந்தி மொழியில் வாக்கியம் இடம்பெற்றதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை பயோ - மெட்ரிக் கருவிகளின் மூலம் பதிவு செய்யும் முறையை பள்ளி கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த கருவியில், இதுவரை தமிழ், ஆங்கில வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில், புதுப்பிக்கப்பட்ட பயோ-மெட்ரிக் கருவிகளில் தமிழ் வார்த்தைகளுக்கு பதிலாக, இந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனடியாக இந்தி வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயல்வதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் தற்போது ஆசிரியர்களின் விரல் ரேகை பதிவேட்டில் இந்தி இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.