தமிழகத்தில் பரவலாக மழை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிதமான முதல் கன மழை பெய்தது.
திண்டுக்கல், வேடசந்தூர், சின்னாளபட்டி, எரியோடு, தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது, இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நாமக்கல் ,சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய இடங்களில். 30 நிமிடங்களுக்கு மேலாக மிதமானது முதல் கன மழை பெய்த்து. இதனால் வறண்ட விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது கண்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, அழகியமண்பம், முடைக்காடு, வட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நனைந்தபடியே வீடு திரும்பினர்.இதே போன்று அரியலூர், செந்துறை ஜெயங்கொண்டம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நீலகிரி மாவட்டம் முதுமலை, கூடலூர், தேவாலா, ஊட்டி, எமரால்டு, அவலாஞ்சி ஆகிய நீர்பிடிப்பு பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.பலத்த காற்று வீசியதால் மின்தடை ஏற்பட்டது.ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பத்தலபள்ளி, சூளகிரி, காமன்தொட்டி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது.மழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. வாகனங்கள் மழை நீரில் ஊர்ந்து சென்றன.இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரி, சோழவரம், பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பொன்னேரி ரயில்வே பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், குன்னுார் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சுமார் 45 நிமிடங்கள் பெய்த மழையால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடலூர் மாவட்டத்தில், விருத்தாச்சலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.புதுச்சேரியிலும், மாலைக்கு பிறகு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.