மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் விவகாரம் : "எந்த ஒரு திட்ட அறிக்கையும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை" - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியானது
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக எந்த ஒரு திட்ட அறிக்கையும் இதுவரை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
மதுரை அருகே கே.புதுப்பட்டியில் ஆயிரத்து 264 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தமிழ்நாடு அரசு திட்ட அறிக்கை குறித்து மதுரையை சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு மனு அளித்து இருந்தார். அப்போது தான் எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட அறிக்கை குறித்த எந்த ஒரு தகவலும் தமிழ்நாடு அரசு சார்பில் சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இன்னும் கால தாமதம் ஆகும் என தெரியவந்துள்ளது.