வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு நடவடிக்கை : ஜூலை 20 உடன் நிறைவு பெறுகிறது சட்டப்பேரவை கூட்டத் தொடர்
வேலூர் மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் 20ஆம் தேதியோடு சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. வரும் 30ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரவை அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அதிமுக கொறடா ராஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர், திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவித்தார். அதன்படி வரும் 20ஆம் தேதியுடன் கூட்டத்தொடர் நிறைவடைய உள்ளதாக கூறினார். காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டமானது பிற்பகல் 2 மணி வரையும், மீண்டும் 4 மணிக்கு தொடங்கும் கூட்டமானது அலுவல் நேரம் முடியும் வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.