"பொறுப்பான பதவியில் உள்ள கிரண்பேடி தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா?" - கிரண்பேடிக்கு வளர்மதி கண்டனம்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வளர்மதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் , பொறுப்பான பதவியில் உள்ள கிரண்பேடி தன்னிலை உணராமல் தடித்த வார்த்தைகளைக் கூறலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். பெண்மைக்கே உரிய உயர்ந்த தயையும், தாயுள்ளமும் சிறிதுமின்றி கிரண்பேடி பதிவு செய்திருக்கும் கருத்து அதிர்ச்சியும் வேதனையும் தருவதாக குறிப்பிட்டுள்ளார். தண்ணீர் பிரச்சனை உள்ள இந்த நேரத்தில் இங்கீதம் தெரியாமல் வார்த்தைகளை அள்ளி வீசியிருப்பது கிரண்பேடியின் பதவிக்கு அழகல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார். சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்க இயன்ற அனைத்தையும் தமிழக அரசு செய்துவருவதாக வளர்மதி தெரிவித்துள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்து கண்ணியம் காக்கவும் கிரண்பேடிக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.