"மீனவர்கள் வீடு கட்ட ரூ.85 கோடி ஒதுக்கீடு" - சட்டப்பேரவையில் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
மீனவர்களுக்கு வீடு கட்டிதர ரூ.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது திண்டிவனம் தொகுதி தி.மு.க உறுப்பினர் சீதாபதி, திட்டக்குடி உறுப்பினர் கணேசன் உள்பட பலர் மீனவர்களுக்கு வீடு கட்டித்தருவது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ஏழை மீனவர்களுக்கு வீடு கட்டித்தரும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இதற்காக 85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது வரை 53 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். போதுமான இடம் மற்றும் பட்டா, கூட்டுறவு சங்கத்தில் மீனவர்கள் உறுப்பினராக இருந்தால் வீடு கட்டுவதற்கு அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.