தேர்தல் கலவரத்தால் தடைபட்ட தேர் தீமிதி திருவிழா : அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் சிறப்பாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே தேர்தல் கலவரத்தால் தடைபட்ட தேரோட்டம் மற்றம் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 18ந்தேதி நடைபெற்ற தேர்தலின் போது இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதனால் அங்கு நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு, திருவிழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தடைபட்ட கோயில் திருவிழா கடந்த இரு நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் தீமிதி விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுடன் திரௌபதி அம்மனை சுமந்த அலங்கரிக்கப்பட்ட தேர், பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க, தீமிதி திடலை வந்தடைந்தது. இதையடுத்து பக்தர்கள் தீ மிதித்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.