ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
81 வயது ஓய்வூதியரின், ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக, கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 1996 செப்டம்பர் 30-ல் ஓய்வு பெற்றவர் சுப்புராஜ். இவருக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில், தவறு நேர்ந்ததாகவும், கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திரும்ப வசூலிக்க கருவூலத்துறை அலுவலர் கடந்த 2015 அக்டோபர் 15 ஆம் தேதி உத்தரவி்ட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து தம்மிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஆறாயிரத்து 152 ரூபாயை திரும்ப வழங்கக் கோரி சுப்புராஜ் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ,"ஓய்வு பெற்ற ஊழியர்களாக இருந்தாலும் கூடுதல் ஓய்வூதியம், ஓய்வூதிய பலன்கள் பெற உரிமையில்லை என்றும், அதே நேரத்தில் அரசு ஊழியர்களின் பணி உரிமையை பாதிக்கும் வகையில், எந்த உத்தரவு பிறப்பித்தாலும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு வாய்ப்பு வழங்காமல் பிறப்பிக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார். மேலும், மனுதாரருக்கு தற்போது 81 வயதாகும் நிலையில், இனிமேல் அவரது ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்தால் மனுதாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, அவரது ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மனுதாரின் சம்பளம், ஓய்வூதியம் நிர்ணயம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதனால் இழப்பு ஏற்பட்ட பணத்தை அவர்களிடம் இருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள நீதிபதி, தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியம், ஓய்வூதியம் மற்றும் சம்பள பாக்கி தொகையை திரும்ப வசூலிப்பது தொடர்பாக, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை, தலைமைச் செயலாளர் பிறப்பிக்க வேண்டும் என்றும் பிரதமர் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.