"தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயம் பெற வேண்டும்"
"ஒருமாதத்திற்குள் கட்டண நிர்ணயம் பெறாவிட்டால் நடவடிக்கை"
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் ஒரு மாதத்திற்குள், கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "கட்டண நிர்ணயக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள், தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், ஒரு மாதத்திற்குள் தனியார் கல்விக் கட்டண நிர்ணய குழுவிற்கு விண்ணப்பம் செய்து கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் விவரத்தை, வரும் 1ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், கட்டண நிர்ணயம் செய்து கொள்ளாத பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.