ராமநாதபுரம் - தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு : சுற்றுச்சூழல், வனத்துறை செயலருக்கு நோட்டீஸ்
ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டுச் செல்லும் திட்டம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்லம் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கான 700 கோடி திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்துவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.