சக காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த காவலர்கள் : மதுபோதையில் இடையூறு செய்ததாக வழக்கு பதிவு
கன்னியாகுமரியில் மதுபோதையில் சக காவலர்களை பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள காவலர், ஏற்கனவே பல குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர்கள் சாம்சன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர், நேற்று இரவு கஞ்சா வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். செல்லும்வழியில், மது போதையில் இருந்த காவலர் சைலஸ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் காவலர்கள் சாம்சன், ஆறுமுகத்தை இடை மறித்து, குற்றவாளியை புகைப்படம் எடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் இருதரப்பு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, குடிபோதையில் இருந்த காவலர்கள் சைலஸ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் , ஆபாச வார்த்தைகளில் திட்டியதாக கூறப்படுகிறது. அதோடு, குற்றவாளியை அழைத்து செல்லவிடாமல் தடுத்து இடையூறு செய்ததால், காவலர் சைலஸ் மற்றும் கிருஷ்ண குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காவலர் கிருஷ்ணகுமார் சக காவலரை தாக்கியதாக, ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன்பின்,கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் குடி போதையில் காரை அடித்து நொறுக்கியதாக மீண்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய காவலர்களே அடுத்தடுத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது மக்களை மட்டுமல்லாமல் காவலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.