பிரபல ரவுடி கதிர்வேலின் என்கவுன்ட்டர் வழக்கு : நீதி விசாரணையை தொடங்கியது மாஜிஸ்திரேட்
சேலத்தில் பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் காரிப்பட்டியில், போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற பிரபல ரவுடி கதிர்வேல் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இதில் காயம் அடைந்த ஆய்வாளர் சுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை சரக ஐ.ஜி. பெரியய்யா, அவர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தார். மேலும், என்கவுன்ட்டரின் போது, நடந்த பிரச்சினைகளை அங்கிருந்த காவலர்களிடம் ஐஜி கேட்டறிந்தார். இதனிடையே, என்கவுன்ட்டர் தொடர்பாக சேலம் 3-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சரவணபவன், விசாரணையை தொடங்கியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனை பிணவறையில், நீதிமன்ற நடுவர் முன்னிலையில், ரவுடி கதிர்வேலின் அங்க அடையாளங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார். அதன் பின்னர், கதிர்வேலின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த நீதிபதி சரவணபவன் முடிவு செய்துள்ளார். முழு விசாரணைக்கு பிறகே, ரவுடி கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என கூறப்படுகிறது.