"மகள் திருமண ஏற்பாட்டிற்காக 6 மாதம் பரோல் தாருங்கள்" - சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மீண்டும் மனு
மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தனது தூக்கு தண்டனை 2000 ஆம் ஆண்டு, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், இதுவரை, 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த மூவாயிரத்து 700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்துள்ளதை மனுவில் நளினி சுட்டிக்காட்டி உள்ளார். ஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் வழிவகை செய்துள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு பரோல் வழங்கப்படவில்லை என்றும் நளினி அதில் சுட்டிக்காட்டி உள்ளார். கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனு மீது, வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை எனவும் , இந்த மனு விசாரணைக்கு வரும் போது, வழக்கறிஞர் இல்லாமல் தாமே வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் நளினி கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.