மெரினா கடற்கரையில் திருடப்படும் இருசக்கர வாகனங்கள் - கடந்த 8 ஆண்டுகளாக கைவரிசை காட்டிய 2 பேர் கைது
திருடிய பைக்குகளை மீட்க முடியாமல் போலீஸ் திணறல்
சென்னையில் பொழுதுபோக்குவதற்கு ஏராளமானவர்கள் வந்து செல்லும் இடம் மெரினா கடற்கரை. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள், நீச்சல் குளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடைகள் அருகில் வாகனங்களை நிறுத்தி வைத்துச் செல்கின்றனர்.அப்படி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார் வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மெரினா நீச்சல் குளம் அருகே, பைக் திருட முயன்ற இருவர் போலீசாரிடம் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமது நவாஸ் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த முகமது ரபிக் என்பதும் , இருவரும் சேர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக கள்ள சாவி மூலம் பைக்குகளை திருடியதும் தெரிய வந்தது.இதை அடுத்து, அந்த பைக்கின் உரிமையாளர் விஜய் அளித்த புகாரின் பேரில், முகமது நவாஸ், முகமது ரபிக் இருவரையும் அண்ணா சதுக்கம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஏராளமான பைக்குகளை கள்ள சாவி மூலம் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து ஒரே ஒரு பைக் மட்டும் பறிமுதல் செய்ய முடிந்துள்ளது, மீதமுள்ள பைக்குகள் பறிமுதல் செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.மெரினா கடற்கரையில் சுந்தரி அக்கா கடை, நீச்சல் குளம் ஆகிய இடங்களில் கடந்த 8 ஆண்டுகளாக திருடிய வாகனங்களை புதுப்பேட்டைக்கு கொண்டு சென்று உடனடியாக பாகம் பாகமாக பிரித்து விற்றுள்ளதாக விசாரணையில் கூறியுள்ளனர்.இதற்கு முன்னர் இரண்டு முறை வாகன சோதனையில் மாட்டியபோது, மது போதையில் இருப்பது போன்று நடித்து தப்பியதாகவும் பிடிப்பட்ட இருவரும் தெரிவித்துள்ளனர்.வழக்கமாக இருசக்கர வாகனங்களை திருடும் கும்பலிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் நிலையில், அவர்கள் இருவரும் திருடிய பைக்குகளை பாகம், பாகமாக பிரித்து விற்பனை செய்துள்ளதால், திருடப்பட்ட பைக்கை எப்படி பெறுவது என தெரியாமல் போலீசார் குழம்பியுள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.