மிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது

முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-02-09 04:46 GMT
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கோபி என்பவரிடம், பாங்காக் விமான நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றுவதாக ஒருவர் அன்பாக பேசி அறிமுகமாகியுள்ளார். பின்னர், இருவரும் நண்பர்களான நிலையில், மீண்டும் ஊருக்கு செல்வதால் தனது மனைவிக்கு நகை வாங்க வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து பிரபல நகை கடைக்கு கோபி அவரை அழைத்து சென்றுள்ளார். அப்போது கோபி கழுத்தில் இருந்த 5 சவரன் செயின் மாடல் நன்றாக இருப்பதாகவும், கழற்றி காட்டுமாறும் பாங்காங் நபர் கேட்க, கோபியும் கழட்டி கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த நபர் மாயமாகியுள்ளார். 

ஏமாற்றப்பட்டதை அறிந்த கோபி, போலீசில் புகார் அளித்ததோடு, அந்த நபரின் புகைப்படத்தையும் கொடுத்துள்ளார். இதேபோல மேற்கு மாம்பலம், பள்ளிக்கரணை, தேனாம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் புகார்கள் பதிவானதால், போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு பாங்காங் நபர் என கூறிய திருடனை கைது செய்துள்ளனர். விசாரணையில், சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரிந்தது. அறிமுகமாகும் ஒவ்வொருவரிடமும் வெளிநாட்டிலிருந்து வருவதாகவும் மென்பொறியாளர், காவல் அதிகாரி, கஸ்டம்ஸ் அதிகாரி என பலவித கெட்டப்புகளையும் கூறி, நட்பாகி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.  

சூழ்நிலைக்கு ஏற்றார் போல், கொள்ளையடிக்க போகும் நபரை தீர்மானித்து, அவரை பின் தொடர்ந்து, 2 நாட்கள் நெருங்கிய உறவினர் போல பேச்சு கொடுத்து நம்பிக்கையையும் கார்த்திக் பெற்று விடுவாராம். பேச்சு திறமையால் முன்பின் தெரியாதவர்களையும் நம்ப வைத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி, நகையையோ பணத்தையோ கொள்ளையடிப்பது கார்த்திக்கின் வழக்கம். தொடர் விசாரணை மூலம் கார்த்திக்கை கைது செய்த போலீசார், 25 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்