தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை : தலைமைச் செயலாளர், டி.ஜி.பி பங்கேற்பு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி காட்சிமூலம் ஆலோசனை செய்துள்ளார்.
தமிழகத் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி, வருமான வரித்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நிலை சட்டம் ஒழுங்கு பிரச்னை, தேர்தல் நடத்துவதற்கு தயார் நிலை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன. ஆலோசனைக்கு பின்னர் பேசிய அதிகாரிகள், திட்டமிட்டபடி வரும் 31 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தேர்தல் பணிகளில் எந்தவித பாதிப்புமில்லை என்பதுடன் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றும் கூறினர். ஒசூர் தொகுதி குறித்து சட்டப்பேரவை செயலாளரிடமிருந்து தகவல் வரவில்லை என்றும், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள் பணியிடம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.