கடன் பெறும் போது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும் : வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடு செல்வதை தடுக்க யோசனை
வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க கடன் பெறுவோர் தங்கள் பாஸ்போர்ட்டை வங்கிகளிடம் ஒப்படைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நிலையூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் மங்களம், வேறு ஒருவரின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சிங்கப்பூர் சென்றதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மங்களம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கும்படி கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை என தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பளித்தார். அப்போது போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற அங்கன்வாடி ஊழியருக்கு ஒரு வார சிறை தண்டனை விதித்தார். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, கடன் பெறுபவர்கள், தங்கள் பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட வங்கிகளில் சமர்ப்பிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.