மரச்செக்கு எண்ணெயை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்...
வாகை மரத்தால் ஆன செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் ரகங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அன்றாட சமையலுக்கு பயன்படும் பிரதான பொருட்களில் எண்ணெய்க்கு முக்கியத்துவம் உண்டு. வறுக்க, பொறிக்க, தாளிக்க என விதவிதமாக எண்ணெய் வகைகளை பயன்படுத்தும் மக்கள் விளம்பரங்களை பார்த்து எண்ணெய் வகைகளை தேர்வு செய்வார்கள். ஆனால் சமீப காலமாக ஆரோக்கியத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் பழமையான உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கலாம்...இதற்கு ஏற்றார் போல அதிகளவிலான செக்கு எண்ணெய் கடைகள் அதிகளவில் முளைத்திருக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த மக்கள் பழமைக்கு மாறும் முயற்சி தான் இது.. கல் செக்கு, மரச்செக்குகளால் ஆட்டப்படும் எண்ணெய் வகைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எண்ணெய் வித்துகளை கொண்டு அரைக்கப்படும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் இயற்கையான முறையில் ஆட்டப்படுகிறது. கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வாகை மரத்தால் ஆன செக்கு பயன்படுத்தப்படுகிறது. பல மருத்துவ குணங்கள் கொண்ட இந்த வாகை மரமானது, ஆரோக்யத்தை வழங்கக் கூடியது என்பதால் இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது... கரூர் மாவட்டம் மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள் இந்த வாகை மர செக்கு எண்ணெயை வாங்கிச் செல்கின்றனர். இயற்கையான வாசனையுடன் ஆரோக்யத்திற்கு உத்தரவாதம் தரும் இந்த எண்ணெய் பலராலும் பெரிதும் விரும்பி வாங்கப்படுகிறதாம்...மக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கல்லூரி பேராசிரியராக இருந்த குணசேகரன் அந்த வேலையை விட்டு விட்டு செக்கு எண்ணெய் தயாரிக்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார்... இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நோய்களை தடுக்க முடியும் என கூறும் அவர், இந்த பணி தனக்கு மனநிறைவை தருவதாகவும் தெரிவிக்கிறார்...நோய் வந்த பிறகு அவதிப்படுவதை காட்டிலும், அதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. அதை உணவின் மூலமாகவே கொண்டு செல்லும் முயற்சியை முன்னெடுக்க வேண்டியதும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று...