கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்திய சம்பவம்: சிசுவுக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க முடியுமா..?
சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி ரத்தம் மாற்றி ஏற்றிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
சாத்துரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. ஒரு தவறும் செய்யாத தனது நிலைக்கு, அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக, சாத்தூர் நகர காவல்நிலையத்தில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண், அவரது கணவர் இருவரும் புகார் மனு அளித்துள்ளனர். அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள், ரத்த வங்கி பணியாளர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் பேசிய அந்த பெண்ணின் கணவர், தனியார் மருத்துவமனையில் தனது மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், சிவகாசி ரத்த வங்கி ரத்த பரிசோதகர் வளர்மதி, சிவகாசி நம்பிக்கை மையம் ரத்த பரிசோதகர் கணேஷ்பாபு, இவர்களை தவிர சிவகாசி நம்பிக்கை மைய ஆலோசகராக உள்ள ரமேஷ் ஆகிய 3 பேரை பணி இடை நீக்கம் செய்து சுகாதார இணை இயக்குநர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உறுதி அளித்துள்ளார்.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், சிசு கருவில் இருக்கும் போதே ரத்தம் ஏற்றப்பட்டதால், குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கிறதா என்பது கேள்விக்குறி தான் என மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
பெரும் புயலை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, மதுரை அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழு உடனடியாக விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சிவகாசி ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.